மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா வைகுண்டர் எழுந்தருளினார்.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Published on

மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர் திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பு நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் இரவில் அய்யா வைகுண்டர் காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அய்யா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பும், அதைதொடர்ந்து தேர் அலங்காரம் செய்தல், பணிவிடையும் நடைபெற்றது.

இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டர் எழுந்தருளினார். இதையடுத்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் வாணவேடிக்கை, சங்கு முழக்கம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளம் முழங்கப்பட்டது.

தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் பத்மநாபன், பிரைட் முருகன், அருணாச்சலம், கோவை அய்யா வைகுண்டர் சிவபதி அரிராமன், அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் துரைப்பழம், பொதுச்செயலாளர் சுவாமி நாதன், பொருளாளர் ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் ஐவென்ஸ், துணை தலைவர் சுந்தரேசன், இணை பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் என்ஜினீயர் விஜயகுமார் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

தேரில் எழுந்தருளிய அய்யா வைகுண்டர், மணலி புதுநகர் பகுதிகளில் வீதிஉலா வந்து, பின்னர் கோவிலை வந்தடைந்தார். விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com