பிரமாண்ட சிவலிங்கம்

மத்தியப் பிரதேசம், கஜூராஹோ நகரில் அமைந்திருக்கிறது, மாதங்கேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர், சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார்.
பிரமாண்ட சிவலிங்கம்
Published on

கஜூராஹோ காலத்து நினைவுச்சின்னங்களில், வழிபாட்டிற்காக இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஆலயம் இதுவாகும். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கி.பி. 900 முதல் 925-ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

மாதங்க என்ற முனிவர், லிங்க வடிவமான சிவபெருமானை தன்னுடைய அன்பால் கட்டுப்படுத்தினார். கஜூராஹோ, கேதார்நாத், வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும், தற்போது 'நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சன்று, மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று, தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர், சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். சுமார் 4 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட ஆவுடையார் பீடத்தில், பெரிய சிவலிங்கத்தின் மேற்பகுதியான பாணம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிவலிங்க பாணமானது, சுமார் 3 அடி அகலமும், 9 அடி உயரமும் கொண்டது.

கஜூராஹோவின் மணற்கல் கோவில்களில் மாதங்கேஸ்வரர் கோவில் மிகவும் எளிமையானது. இது அதிக அளவில் அலங்கரிக்கப்படவில்லை. அதன் உட்புறச் சுவர்கள், வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com