மேல்மலையனூர் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தேர் திருவிழாவையொட்டி பனை, புளி, காட்டு வாகை, சவுக்கு உள்ளிட்ட பச்சை மரங்களைக் கொண்டு புதியதாக தேர் உருவாக்கப்பட்டிருந்தது.
மேல்மலையனூர் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருவிழா தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக் கொள்ளையும், 12-ந் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றன. மேலும் தினசரி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேர் திருவிழாவையொட்டி பனை, புளி, காட்டு வாகை, சவுக்கு உள்ளிட்ட பச்சை மரங்களைக் கொண்டு புதியதாக மேற்கு வாசலில் தேர் உருவாக்கியிருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர். பின்பு கோவிலின் உட்பிரகாரத்திலிருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து தேரில் அமர்த்தினர். பின்பு பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலைச் சுற்றி அசைந்தாடியடி நிலைக்கு வந்தது. தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு இன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com