இரக்கம் காட்டும் இறைவன்

தேவனுக்கும், உங்களுக்கும் இடையே உள்ள உறவை, குடும்ப சமாதானத்தை- பாவம் உடைக்கிறது. மன அமைதியை கெடுத்து, மனச்சாட்சியை வாதிக்கச் செய்து சந்தோஷத்தை உடைக்கிறது.
இரக்கம் காட்டும் இறைவன்
Published on

கணவன், மனைவிக்குச் செய்கிற துரோகங்களும், மனைவி, கணவனுக்குச் செய்கிற துரோகங்களும் பெரிய பிரச்சினையையும், பிரிவுகளையும், கண்ணீரையும் கொண்டு வருகிறது.

ஆடுகளின் பின்னால் நடந்த தாவீதை ஆண்டவர் இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். ஆனால், தன் அரண்மனையின் உப்பரிக்கையிலே உலாவின அவர் கொடூரமான பாவத்தில் விழுந்தபோது, அவர் செய்த பாவம் அவருடைய இருதயத்தை உடைத்தது.

நாத்தான் என்னும் தீர்க்கதரிசி ஒருவன் அவருடைய குற்றத்தை உணர்த்தியபோது, தாவீதினுடைய உள்ளம் உடைந்தது. அப்போது அவர் தான் ஒரு உடைந்த பாத்திரம் என்றும், தன்னை மறுபடியும் ஆண்டவர் எடுப்பித்துக் கட்டவேண்டும் என்றும் கண்ணீரோடு மன்றாடினார்.

"செத்தவனைப் போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன். உடைந்த பாத்திரத்தைப் போலானேன்" (சங். 31:12) என்று கதறி அழுது சொன்னார்.

ஆண்டவர் வாழ்க்கையை வனையும் பரம குயவன். உங்கள் வாழ்க்கை உடைந்து போன பாத்திரம் போல இருந்தாலும், தூக்கி எறிந்துவிடாமல், மறுபடியும் உருவாக்கும்படி கிருபையின் தருணங்களைத் தருகிறவர்.

"குயவன் கையில் களிமண் நான்; அனுதினம் நீர் வனைந்திடுமே" என்று ஜெபத்தோடு ஆண்டவருடைய முகத்தை நோக்கிப் பாருங்கள். நீங்கள் விழுந்தால் விழுந்த இடத்திலேயே கிடக்கக்கூடாது. உடனே கண்ணீரோடு தேவனிடம் திரும்பி விட வேண்டும். உண்மையாகவே பாவங்களுக்காக வருந்தி, ஆண்டவரை நோக்கிப் பார்த்து கதறுவீர்களானால், உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, உங்களை சுத்திகரிப்பதற்கு ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.

தாவீது கதறியபோது கர்த்தர் மன்னிக்கவில்லையா? பேதுரு இயேசுவை மறுதலித்து, சபித்து சத்தியம் பண்ணினதை எண்ணி கதறி அழுதபோது, மீண்டும் பேதுருவினுடைய வாழ்க்கையை சீராக்கி பிரதான அப்போஸ்தலனாக நிலை நிறுத்தவில்லையா? சிம்சோன் தன்னுடைய பாவங்களுக்காக வருந்தி 'ஒரு விசை என்னை நினைத்தருளும்' என்று கதறி அழுதபோது, சிம்சோன் இழந்த பெலனை கர்த்தர் திரும்ப தந்துவிடவில்லையா?

பிரியமானவர்களே, நீங்கள் இன்றைக்கு எந்த நிலைமையில் இருந்தாலும், இறைவனிடம் திரும்பி வரும்போது, நிச்சயமாகவே அவர் இரக்கம் பாராட்டுவார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவேயில்லை. தமது மிகுந்த காருண்யத்தின்படி உங்களுக்கு மனமிரங்குவார். மீண்டும் உங்களை வெற்றியடையச்செய்வார்.

"ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக" (வெளி. 2:5).

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com