பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்குகிறது

வருகிற 12-ந்தேதி விஜயதசமி அன்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்குகிறது
Published on

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் திருக்கார்த்திகை, நவராத்திரி, கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில், முருகப்பெருமான், துவார பாலகர்கள் உள்ளிட்டோருக்கு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி விஜயதசமி அன்று வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அன்று பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். தொடர்ந்து 3 மணிக்கு பராசக்தி வேல் மலைக்கோவிலில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நவராத்திரி விழாவையொட்டி 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 10 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. நவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com