சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா

சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரர் கோவில் ஆடித்திருவிழா
Published on

சின்னமனூர்,

தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக தனி கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு பூஜை செய்து கோவில் முழுவதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர், காலை 11.31-மணிக்கு காகம் சகுனம் பார்த்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இங்குள்ள சுரபி நதிக்கரையில் குளித்துவிட்டு ஆடைகளை நதியிலேயே போட்டு விட்டு புத்தாடை அணிந்து எள், உப்பு, பொரி வாங்கி கொடிமரத்தில் தூவி நெய் தீபம் ஏற்றி, மூலஸ்தானம் சென்று சனீஸ்வர பகவானை அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷம் கழிவதாக ஐதீகம். திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, தொழில் விருத்தியடையாமை உள்ளிட்ட பல காரணங்களுக்கு இங்கு வந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இதனால் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

ஆடி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநில பக்தர்களும் இங்கு அதிகளவு வந்து வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதிவரை 5 வாரங்கள் தொடர்ந்து நடைபெறும். விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் எந்தவித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஈஸ்வரன் (போடி), சீமைச்சாமி (உத்தமபாளையம்) ஆகியோர் தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com