பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பம்சம் ஆகும்.

பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

இதனையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூரயாகம், வாத்திய பூஜை நடந்தது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா" என சரண கோஷங்களை எழுப்பினர்.

திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் நேற்று உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டப்பட்டது.

பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ந்தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடக்கிறது. பின்னர் 11-ந்தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com