உலகப் புகழ்பெற்ற பூரி ரத யாத்திரை தொடங்கியது.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பாரம்பரிய வழக்கப்படி, பூரி மன்னர் கஜபதி தேர்களை தங்கத் துடைப்பத்தால் சுத்தம் செய்து வழிபட்டார்.
Published on

பூரி:

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது. மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவிலை (குண்டிச்சா கோவில்) அடைந்து ஒரு வார காலம் ஓய்வெடுத்து மீண்டும் இருப்பிடம் திரும்புவதே இந்த யாத்திரையாகும். குந்திச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலில் ஜெகநாதர் சிறிது ஓய்வு எடுப்பார்.

ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தர்பதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்படும். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலையில் ரத யாத்திரைக்கான பூஜைகள் தொடங்கின. பிற்பகல் மூலவர்களை தேர்களுக்கு எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பாரம்பரிய வழக்கப்படி, புரி நகர மன்னர் கஜபதி தேர்களை தங்கத் துடைப்பத்தால் பெருக்கிச் சுத்தம் செய்தார். பின்னர் ஆரத்தி காண்பித்து  பூஜை செய்தார். இந்த நிகழ்வு முடிந்ததும், ரதங்களுடன் இணைக்கப்பட்டிருந்த மரப் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு ரதங்களுக்கான குதிரை சிற்பங்கள் இணைக்கப்பட்டன. ஜெகநாதர் தேரில் வெள்ளை நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள், பாலபத்திரர் தேரில் கருப்பு நிறத்தில் 4 குதிரைகள், சுபத்ரா எழுந்தருளும் தேரில் சிவப்பு நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள் இணைக்கப்பட்டன. 4 தேர்களுக்கும் சாரதிகள் அமர வைக்கப்பட்டனர். அதன்பின்னர் ரத யாத்திரை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.

முதலில் பாலபத்திரர் தேர், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

9 நாட்கள் இந்த திருவிழா நடைபெற உள்ளது. தேர்கள் குந்திச்சா கோவிலை சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குந்திச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவுபெறும்.

ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com