திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 டன் மலர்களால் புஷ்ப யாகம்

புஷ்ப யாகத்தையொட்டி இரவு உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Published on

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நேற்று புஷ்ப யாகம் விமரிசையாக நடந்தது. அதையொட்டி நேற்று காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்ப யாகம் நடந்தது.

புஷ்ப யாகத்தில் துளசி, சாமந்தி, கன்னேரு, தாழம்பூ, சம்பங்கி, ரோஜா, தாமரை போன்ற 12 வகையான பாரம்பரிய மலர்களும், துளசி, மருவம், தவனம், வில்வம், பன்னீர் இலை உள்ளிட்ட 6 வகையான இலைகளும் சேர்த்து மொத்தம் 3 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த மலர்களை ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். புஷ்ப யாகம், வாகன வீதி உலாவில் கோவில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து அர்ச்சகர்கள் கூறுகையில், கோவிலில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவை, நித்ய கைங்கர்யங்களில் தெரிந்தோ, தெரியாமலோ அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்பட்டதாக, தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com