ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. திருவிழாவில் முதல் நாளில் ராவண சம்ஹார நிகழ்ச்சியும், 2-வது நாளில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கும் ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 3-வது நாளான நேற்று கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா விமரிசையாக நடந்தது. அதற்காக விசுவநாதனர் சன்னதி எதிரே புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு கலச பூஜை நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசமானது சாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி கொண்டுவரப்பட்டு கருவறையில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விசுவநாதர் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள் சந்தோஷ் முகம் முழுவதும் செந்தூரம் பூசி ஆஞ்சநேயர் சாமி விக்ரகத்தை தோளில் சுமந்தபடி சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி ஆடி வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி விக்ரகத்துடன் குருக்கள் கருவறைக்குள் சென்றார். அங்கு ராமநாதசுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தன. நேற்று இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள், ராமபிரான் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com