சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்

சபரிமலை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் பிரதான ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது. ‘கடவுள் பூமி’ என்று அழைக்கப்படும், கேரளாவின் மேற்கு மலைத் தொடரில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது, இந்த சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்.
சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்
Published on

மலையின் உச்சியில் 7 மலைகளுக்கு அப்பால் ஐயப்பன் வீற்றிருக்கும் இடத்திற்கு 'சபரி பீடம்' என்று பெயர். இந்த சபரி என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தால், இது ராமாயண காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.

திரேதாயுகத்தில் திருமால், ராமராக அவதரித்திருந்தார். அவர், தசரதரிடம் கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும்படி ஆனது. திருமால் ராமாவதாரம் எடுப்பதற்கு முன்பிருந்தே, ராமபிரானை வழிபடும் நோக்கத்தில் சபரி என்ற பெண், வனத்தில் வசித்து வந்தாள். அவளுக்கு ராமபிரானின் மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் இருந்தது. அவர் என்றாவது ஒருநாள், தன்னை சந்திக்க வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த சபரி, ராமருக்காக தினமும் வனத்திற்குள் சென்று கனிகளை எடுத்து வருவார். அவை ருசியாக இருக்கிறதா என்பதை, அந்த கனிகளை கடித்துப் பார்ப்பார். அதில் இனிப்பு சுவை உள்ள பழங்களை மட்டுமே ராமபிரானுக்காக சேகரித்து வைப்பார்.

ஆனால் சபரிக்கு ராமரைக் காணும் சந்தர்ப்பம் பல ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. ராவணன், சீதையைக் கடத்திச் சென்று விட்டதை அடுத்து, சீதையை தேடி காடுகளில் அலைந்தபோது, சபரி என்ற முதிய பெண், ராமருக்காக காத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியை சந்திக்கச் சென்றார், ராமபிரான். அவரைக் கண்டதும் ஆவலில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ஸ்ரீராமனுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்த இலந்த பழங்களை அவருக்கு கொடுத்தார். அது சபரி அன்னை கடித்து எச்சில் படுத்திய பழங்களாக இருந்தாலும் கூட, அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்த ராமர், இலந்த பழங்களை ருசித்து சாப்பிட்டார். பின்னர், சபரி அன்னைக்கு மோட்சம் அளித்ததோடு, அந்த அன்னை வாழ்ந்து வந்த மலைக்கும் மோட்சம் அளித்தார். அன்றிலிருந்து அந்த மலையும் 'சபரிமலை' என்றே அழைக்கப்பட்டது.

பின்னர் ஐயப்பனின் அவதாரம் நடைபெற்ற தருணத்தில், தான் அமைதியாக தியானம் செய்ய ஐயப்பன் இந்த மலையை தேர்வு செய்தார். அதில் சபரிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ன எண்ணமும் இருந்தது. தர்மசாஸ்தாவான ஐயப்பன், தான் தவமிருக்க எண்ணிய இடத்தை தேர்வு செய்து அம்பை எய்தார். அந்த அம்பு விழுந்த இடம் தான் இந்த சபரிமலை.

உடனடியாக பரசுராமரை அழைத்து தனக்கு அம்பு விழுந்த இடத்தில் கோவில் எழுப்புமாறு கூறிவிட்டு தேவலோகம் சென்று விட்டார். ஐயப்பனின் கட்டளையை ஏற்று பரசுராமர் கோவில் எழுப்பிய இடமே சபரிமலை என்றும், சபரி பீடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com