சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவை இன்று தொடங்கியுள்ளது.

இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார்.

நாளை காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். திருவிழா 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. 10ம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 11ம் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதனை தொடர்ந்து 14ம் தேதி சித்திரை விஷு கனி தரிசனம், படி பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளன. பின்னர், 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் தரிசனம் செய்ய sabarimala.kerala.gov.in , sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com