குழந்தை பாக்கியம் அருளும் செம்புலிவரம் செங்காளம்மன்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ளது, செம்புலிவரம் என்ற கிராமம். இங்குள்ள செங்காளம்மன் கோவில் சிறப்புமிகு ஆலயங்களில் ஒன்றாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
குழந்தை பாக்கியம் அருளும் செம்புலிவரம் செங்காளம்மன்
Published on

கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அமைந்த இந்தப் பகுதி முன் காலத்தில், செம்புலிவனம் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் இருந்து வடநாட்டிற்கு படையெடுத்துச் சென்ற சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதிக்கு வந்தபோது தன் படைகளுடன் இரவு நேரத்தில் தங்கினான். அனைவரும் தூங்கிய நேரத்தில் மன்னனின் கனவில் ஒளி வடிவில் ஒரு அசரீரி தோன்றி, 'செம்புலிகள் வாழும் ஆபத்தான இடத்திற்கு வந்து விட்டீர்கள். உங்களை காப்பாற்றுவது என் கடமை" என்று கூறியது. பின்னர் அந்த ஒளி, ஒரு மரத்தின் அடியில் மறைந்தது. அந்தக் கனவால் திடுக்கிட்டு விழித்த மன்னன், கனவில் தோன்றிய இடத்தைத் தேடினான். அப்போது அவன் கனவில் கண்ட மரம் அங்கே இருந்தது. அது ஒரு அரச மரம். அதன் அடியில் கிருஷ்ண பரமாத்மாவின் கையில் இருக்கும் சங்கு காணப்பட்டது. அதில் இருந்து தோன்றிய அம்மன், சூரனை வதைக்கும் கோலத்தில் காட்சியளித்தாள். அன்னையின் ஒளி வெள்ளத்தில், தன்னைச் சுற்றி செம்புலிகள் இருப்பதை கண்டு மன்னன் பயம்கொண்டான். அவன் அன்னையின் முன்பாக மண்டியிட்டு, "தாயே.. என்னையும், என் படையினரையும் காப்பாற்று. உனக்கு நான் இங்கே ஆலயம் எழுப்புகிறேன்" என்றான்.

அன்னையின் உக்கிரத்தால் செம்புலிகள் அனைத்தும் பயந்து ஓடின. மன்னன் தன் படைகளுடன் தங்கியிருந்த இடம் 'சோழவரம்' என்று தற்போது அழைக்கப்படுகிறது. செம்புலிகள் சூழ மன்னனுக்கு அன்னை காட்சி தந்த இடம் 'செம்புலிவரம்' என்று பெயர் பெற்று விளங்குகிறது. அன்னையின் அருளால் செம்புலிகளிடம் இருந்து தப்பித்த மன்னன், தன் படையினருடன் வடநாட்டிற்குச் சென்று வெற்றியுடன் திரும்பினான். அப்படி திரும்பி வந்த வழியில், தனக்கு உக்கிரமான தோற்றத்திலும், சாந்தமான முகத்துடனும், கோரைப்பல் கொண்டு, தலையில் நெருப்பு ஜூவாலையுடன், கைகளில் கத்தி, பிரம்பு கம்பு, கூர்மையான ஆயுதம், சூலம், கேடயம், மணி, மனித கபாலம் போன்றவற்றை தாங்கி அஷ்ட கரங்களுடன் காட்சி தந்த அன்னைக்கு ஆலயம் எழுப்பினான்.

சங்கில் இருந்து தோன்றியதால் அந்த அம்மனுக்கு 'சங்காத்தம்மன்' என்று பெயரிட்டான். அதுவே மருவி தற்போது 'செங்காளம்மன்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த காலகட்டத்தில், இந்த வழியாக 50 மாட்டு வண்டிகளில் வந்தவர்கள், இத்தல அம்மனின் உற்சவர் சிலையை திருடிச் சென்றனர். அப்போது கோவில் நிர்வாகம் செய்தவரின் கனவில் தோன்றிய அம்மன், தன் சிலையை, 31-வது மாட்டு வண்டியில் வைத்து கொண்டு செல்வதாக கூறினார். அதன்படி ஊர்மக்களுடன் சென்ற கோவில் நிர்வாக அதிகாரி, அந்த சிலையை மீட்டு மீண்டும் ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்து வந்தார். ராஜ கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நுழைந்தவுடன், நடுநாயகமாக உக்கிர நிலையில் காட்சியளிக்கும் செங்காளம்மன் காட்சி தருகிறார். அவருக்கு வலது புறத்தில் சக்தி விநாயகரும், இடதுபுறத்தில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியும் வீற்றிருக்கின்றனர். மூலவரான செங்காளத்தம்மனை வழிபட்டு விட்டு சுற்றி வரும் நிலையில், சாமுண்டீஸ்வரி, புவனேஸ்வரி, பிரம்மிஸ்வரி, நாராயணி, துர்கை அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களை வணங்கலாம். இந்த ஆலயத்தில் உள்ள அரசமரம், 800 ஆண்டுகளாக தல விருட்சமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்த பின்னரே, வாகனத்தை ஓட்டுகின்றனா. இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், எந்த விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்த அன்னையிடம் வேண்டிச் செல்கின்றனர். திருமண தடை, உடல் ரீதியான நோய்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பரணி நட்சத்திரம் அன்று செவ்வரளி மற்றும் எலுமிச்சைப் பழ மாலையை அம்மனுக்கு வழங்கி, வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் நீங்கும். இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 9 பரணி நட்சத்திர தினங்களில் செய்ய வேண்டும். பரணி நட்சத்திரக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இதுவாகும்.

இந்த ஆலயத்தில் மாதம் தோறும் பவுர்ணமி விழா, சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, கார்த்திகை தீபம், நவராத்திரி போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சென்னை கோயம்பேடு, பாரிமுனையில் இருந்து செங்குன்றம், சோழவரம் செல்லும் அனைத்து பஸ்களும், செங்காளம்மன் கோவில் பஸ்நிறுத்தத்தில் நின்று செல்லும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com