சிவகிரி திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 10 மணியளவில் உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
சிவகிரி திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
Published on

சிவகிரி திரௌபதியம்மன் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலில் உள்ள மூலவர் உற்சவர் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. காலை 6.30 மணி அளவில் ஹோமம், அம்மன் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கொடி பட்டம் கோவிலிலிருந்து புறப்பட்டு வீதி உலா வந்து கோவிலை 7 மணியளவில் அடைந்தது. 7.15 மணி அளவில் கொடி மரத்திற்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து அலங்கரித்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஆலய பூசாரி மாரிமுத்து தலைமையில் சோமு பட்டர் கொடியேற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து 8.30 மணியளவில் மகாதீபாராதனை பூஜையும், அனைத்து சுவாமிகளுக்கும் கைகளில் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், ஆலய பூசாரி மற்றும் 40 நாட்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கும் காப்புகள் கட்டப்பட்டன.

பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு திரௌபதி அம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இரவு 10 மணியளவில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். ஒவ்வொரு நாள் திருவிழாவும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்படுகிறது. 8 மற்றும் 9-ம் திருநாள் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.

வருகிற 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூ இறங்கும் திடலில் பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி (பூக்குழித் திருவிழா) நடைபெறுகிறது. 40 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் அனைவரும் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். 11-ந்தேதி புதன்கிழமை அன்று காப்புக் கட்டிகள் சங்கத்தின் சார்பாக மஞ்சள் நீராடும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு இரவு 11 மணியளவில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கோவிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள முத்தால ராவுத்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் கணேஷ் குமார், ஆய்வாளர் வெற்றிவேந்தன், தக்கார் ஆறுமுகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், காப்பு கட்டிகள் சங்கத்தின் நிர்வாகிகள், ஆலய ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com