கடன் பிரச்சினையை தீர்க்கும் தென்னக காசி பைரவர்

ஒருவரின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கால பைரவருக்கு உண்டு.
கடன் பிரச்சினையை தீர்க்கும் தென்னக காசி பைரவர்
Published on

கால பைரவரை வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பகவானின் குருவாகவும், 12 ராசிகள், 8 திசைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவர் கால பைரவர். அதாவது சிவனின் அவதாரமாக சொர்ண ஆகர்ஷண பைரவர் கருதப்படுகிறார். இவருக்கு 63 குழந்தைகள். இவர்களில் முதல் குழந்தை கால பைரவர். சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சன்னிதி உண்டு. அதே போல கால பைரவருக்கு தனிக் கோவில்களும் உள்ளன.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையம் என்ற ஊரில், பைரவருக்கு தனிக் கோவில் உள்ளது. அமைதியான சூழலில், இயற்கை அழகோடு சாலை ஓரமாக அமைந்திருக்கிறது, தென்னக காசி பைரவர் கோவில். இந்தக் கோவிலின் நுழைவு வாசல் பகுதியின் மீது பிரமாண்டமான பைரவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது ஆலயத்திற்குள் பக்தர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. 34 அடி உயர நுழைவு வாசலின் மேல் பகுதியில் அமைந்துள்ள, மகா பைரவரின் சிலையானது, 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்டதாகும். இந்த பைரவர் தனது நான்கு கரங்களுடன், அதில் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் தாங்கி, நாய் வாகனத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த சிலைக்கு, யுனிக் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் என்ற அமைப்பு, 'உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை' என சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த பிரமாண்ட பைரவரைப் பாத்து மெய்சிலிர்த்து விட்டு, நாம் கோவிலுக்குள் சென்றால், நம்மை வரவேற்பது அழகிய மகா மண்டபம். 125 அடி நீளமும், 34 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தில், பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யலாம்.

சிவபெருமானுக்கு 64 வகையான வடிவங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் பைரவா. அதே போல் பைரவருக்கும் 64 வகையான வடிவங்கள் இருப்பதாக புராணங்கள்சொல்கின்றன. மகாமண்டபத்தை சுற்றியுள்ள வெளிப்புறத்தின் மேல் பகுதியில், 64 வடிவங்களில் பைரவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. இந்த மகா மண்டபத்தின் வலது புறம் பைரவரின் உற்சவ மூர்த்தி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோவில் கருவறையில் 5 அடி உயரத்தில் மூலவராக பைரவமூர்த்தி எழுந்தருளியுள்ளார். அவருக்கு முன்பாக சொர்ண லிங்கம் மற்றும் நந்தி பகவான் இருவரும் காட்சி தருகிறார்கள். பொதுவாக கோவில் கருவறைக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் கருவறைக்குள் சென்று, அங்குள்ள சொர்ண லிங்கத்தையும், பைரவ நந்தியையும் தொட்டு வணங்க அனுமதி அளிக்கப்படுகிறது. காசியில் உள்ள பைரவர் கோவிலை போலவே, இங்கும் கோவிலின் கீழ்புறத்தில் மயானமும், வடபுறத்தில் நீரோடையும் உள்ளது. எனவே இந்தக் கோவிலை பக்தர்கள் 'தென்னக காசி' என்று சிறப்பித்து அழைக்கிறார்கள். பக்தர்களின் நோய், நொடிகள் நீங்க இங்குள்ள பஞ்சலோக பைரவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களின் கடன் பிரச்சினையை தீர்க்கும் தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மண்விளக்கு பூஜை சிறப்பானதாகும்.

ஈரோட்டில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் ராட்டை சுற்றிப்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது, தென்னக காசி பைரவர் கோவில். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இங்கு செல்ல ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு ஒரு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அறச்சலூர், காங்கேயம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணித்து இந்த ஆலயத்தை அடையலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com