வெளிநாடுகளில் 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

பிரிட்டன், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.
வெளிநாடுகளில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் (விழாக்காலங்கள் தவிர) சம்பங்கி பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஶ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் பகவானின் திருக்கலயாண கோலத்தை தரிசனம் செய்கின்றனர். இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் மூலமும் தரிசனம் செய்கின்றனர்.

இதேபோல் வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் வெளிநாடுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு பிரிட்டன், அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள 13 நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணங்கள் நடத்தப்படுகின்றன.

இதையொட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சூரிய பிரகாஷ் வெலகா மற்றும் கிருஷ்ஷா ஜவாஜி உள்ளிட்டோர் ஜெர்மனி, பிராங்பர்ட் நகரில் இருந்து வந்து தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளாராவை சந்தித்தனர். அப்போது வெளிநாடுகளில் நடக்கும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணங்களில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர்.

நவம்பர் 9 முதல் டிசம்பர் 21 வரை 8 நாடுகளில் உள்ள 13 நகரங்களில் ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் உள்ளூர் தன்னார்வ மற்றும் கலாச்சார அமைப்புகளுடன் இணைந்து, வெளிநாடுவாழ் தெலுங்கர்கள் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தேவஸ்தான வேத பண்டிதர்கள் வைகாசன ஆகம முறைப்படி சடங்குகளை நடத்துவார்கள். உள்ளூர் தன்னார்வ மற்றும் கலாச்சார மற்றும் மத குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

பிரிட்டன், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் நடக்கும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணங்கள் விவரம்:

பெல்பாஸ்ட், அயர்லாந்து - நவம்பர் 9
டப்ளின், அயர்லாந்து - நவம்பர் 10
பேசிங்ஸ்டோக், பிரிட்டன் - நவம்பர் 16
ஐந்தோவன், நெதர்லாந்து - நவம்பர் 17
ஹாம்பர்க், ஜெர்மனி - நவம்பர் 23
பாரிஸ், பிரான்ஸ் - நவம்பர் 24
வார்சா, போலந்து - நவம்பர் 30
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் - டிசம்பர் 1
மில்டன் கெய்ன்ஸ், பிரிட்டன் - டிசம்பர் 7
கிளவ்செஸ்டர், பிரிட்டன் - டிசம்பர் 8
பிராங்க்பர்ட், ஜெர்மனி - டிசம்பர் 14
பெர்லின், ஜெர்மனி - டிசம்பர் 15
சூரிச், சுவிட்சர்லாந்து - டிசம்பர் 21

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com