தியாகத்தின் நினைவான திருவரங்கம் வெள்ளை கோபுரம்

திருவரங்கம் கிழக்கு கோபுரம், 'வெள்ளை கோபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
தியாகத்தின் நினைவான திருவரங்கம் வெள்ளை கோபுரம்
Published on

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அந்த ஆலயத்தைப் பற்றி நினைத்தாலே, மிக உயரமான ராஜகோபுரம்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் 1987-ம் ஆண்டு வரை இந்த கோபுரம், மொட்டையாக வெறும் 55 அடி உயரத்துடன்தான் இருந்திருக்கிறது.

தற்போது ராஜகோபுரமாக விளங்கும், தெற்கு கோபுரம் கட்டி முடிக்கப்படும் வரை, அதாவது 1987-ம் ஆண்டு வரை கிழக்கு கோபுரம்தான் ராஜகோபுரமாக விளங்கி இருக்கிறது. திருவரங்கம் கோவிலின் அனைத்துக் கோபுரங்களும், விமானங்களும் வண்ணமயமாக காட்சியளிக்க, கிழக்கு கோபுரம் மட்டும் வண்ணம் பூசப்படாமல் இருப்பதை அங்கு சென்று வந்தவர்கள் பார்த்திருக்கக்கூடும்.

மேலும் திருவரங்கம் கிழக்கு கோபுரம், 'வெள்ளை கோபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. 9 நிலைகளைக் கொண்ட இந்த கோபுரத்தின் பின்னால், ஒரு சரித்திரக் கதை ஒளிந்திருக்கிறது.

மன்னர்களின் அரசாட்சி காலத்தில், திருவரங்கம் ஆலயம் பல முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. 15-ம் நூற்றாண்டு வாக்கில் அப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றது. மதுரை சுல்தான் படை, திருவரங்கம் அரங்கநாதர் கோவிலை கைப்பற்றியது. அங்கு இருந்த தங்க ஆபரணங்களை எல்லாம் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இருப்பினும் சுல்தான் படை, அங்கேயே முகாமிட்டு இருந்தது. அதற்கு காரணம், திருவரங்கம் ஆலயத்தில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைய மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சந்தேகம் கொண்டனர். இதனால் திருவரங்கம் ஆலயத்திற்கு செல்லக்கூட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அந்த காலகட்டத்தில் கோவிலில் நடனமாடி, இறைவனுக்கு தொண்டு செய்யும் பெண் ஒருத்தி இருந்தாள். அவர் பெயர் 'வெள்ளையம்மாள்'. அவள், சுல்தான் படையின் தளபதியின் ஆசைநாயகியாக மாறிவிட்டதாக, திருவரங்கம் மக்களுக்கு தெரியவந்தது. அதைக் கேள்விப்பட்டதும், அனைவரும் அவளை திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் ஒருநாள் இரவு வேளையில், சுல்தான் படையின் தளபதியை தனியாகச் சென்று சந்தித்தாள், வெள்ளையம்மாள். அவளைக் கண்டதும், "நீ ஏன் இங்கு வந்தாய்? சொல்லி இருந்தால், நானே வந்திருப்பேனே.." என்றான்.

"நீங்கள் அனைவரும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை கைப்பற்ற காத்திருக்கிறீர்கள். அப்படித்தானே?" என்று கேட்டாள், வெள்ளையம்மாள். தளபதியும் ஆச்சரியத்தோடு, "ஆமாம்.. உனக்கு எப்படித் தெரியும்?" என்றான்.

"அந்த பொக்கிஷம் இருக்கும் இடத்தை நான் அறிந்துகொண்டேன். அங்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். ஆனால் நாம் இருவரும் சென்று அந்த பொக்கிஷத்தை கண்ட பிறகுதான், உங்கள் படையினரை நீங்கள் அழைக்கவேண்டும்" என்றாள், வெள்ளையம்மாள்.

"அதனால் என்ன.. பொக்கிஷத்தை பார்ப்பது மட்டுமல்ல.. அதில் இருந்து உனக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்" என்றான், தளபதி.

இதையடுத்து வெள்ளையம்மாளும் தளபதியும், திருவரங்கம் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்திற்கு வந்தனர். அதன் மேல்பகுதியில்தான் பொக்கிஷம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெள்ளையம்மாள் கூறியதால், தளபதியும் அவளும் அங்கே ஏறிச்சென்றார்கள். கோபுரத்தின் உச்சியில் இருந்து காவிரியையும், ஊரின் அழகையும் கண்ட தளபதி, 'இந்த ஊர் இவ்வளவு அழகானதா?' என்று வியந்தான். மறுநொடியே வெள்ளையம்மாளிடம், 'பொக்கிஷம் எங்கே இருக்கிறது?' என்று கேட்டான்.

தளபதி சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவனை கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டாள், வெள்ளையம்மாள். மேலே இருந்து கீழே விழுந்து உயிர்விடும் நேரத்திற்குள் தளபதி அலறிய சத்தம் கேட்டு, சுல்தான் படையினர் அங்கு விரைந்தனர். கோபுர உச்சியில் நின்ற வெள்ளையம்மாளைப் பார்த்ததும், அவளைப் பிடிக்க கோபுரத்தின் மீது சில வீரர்கள் ஏறினர். ஆனால் "எங்கள் ஊரையும், அரங்கநாதனின் ஆலயத்தையும் சிதைக்க வந்தவர்களுக்கு இதுதான் முடிவு" என்று கூறியபடியே, தானும் அந்த கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர்த்தியாகம் செய்தாள், வெள்ளையம்மாள்.

அப்போதுதான் ஊர் மக்களுக்கு, வெள்ளையம்மாள் எதற்காக தளபதியிடம் நெருக்கமாக பழகினாள் என்பது புரிந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் படைத்தளபதி இல்லாத, சுல்தானின் படையை விரட்டியடித்தனர். அது முதல் வெள்ளையம்மாளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், கிழக்கு கோபுரத்தை "வெள்ளை கோபுரம்" என்று அழைத்தனர். மேலும் அந்த கோபுரத்திற்கு மட்டும் வண்ணம் பூசாமல், வெள்ளையாகவே வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com