மகாளய அமாவாசை நாளில் பித்ரு பூஜை, சிறப்பு பூஜை செய்ய ஏற்ற இடங்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது.
மகாளய அமாவாசை நாளில் பித்ரு பூஜை, சிறப்பு பூஜை செய்ய ஏற்ற இடங்கள்
Published on

மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், பித்ரு தோஷம் இருந்தால் நீங்குவதுடன், எடுத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பித்ரு பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும்.

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல் உள்ளிட்ட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பித்ரு பூஜைகளுக்கு ஏற்றவை.

சில கோவில்களும் பித்ரு பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. மூங்கில் தட்டில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.

தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசை பூஜைக்கு ஏற்ற இடமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com