பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த தரிசன சேவை திட்டம் - பக்தாகள் கருத்து தெரிவிக்கலாம்

கருத்துகளை எழுத்து பூர்வமாக வருகிற 29-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம்.
பழனி முருகன் கோவிலில் இடைநிறுத்த தரிசன சேவை திட்டம் - பக்தாகள் கருத்து தெரிவிக்கலாம்
Published on

பழனி,

அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் பொது தரிசனம் மட்டுமின்றி விரைவாக தரிசனம் செய்யும் வகையில், ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகள் உள்ளன. இதன் வழியாக ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவு பக்தர்கள் வரும் பிரதான கோவில்களில் 'இடைநிறுத்த தரிசனம்' (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலே அதிக பக்தர்கள் வருகை தரும் பழனி முருகன் கோவிலில் 'இடைநிறுத்த தரிசனம்' தொடங்குவது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் கோவில் அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

பழனி முருகன் கோவிலில் 'இடைநிறுத்த தரிசனம்' திட்டம் தொடங்கினால், மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்பட முக்கிய விசேஷ நாட்களில் செயல்படுத்தப்பட மாட்டாது.

இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் இந்த தரிசன சேவை குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால், எழுத்து பூர்வமாக வருகிற 29-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com