இனிப்பானதும்.. கசப்பானதும்..

“என்னுடைய மகளை மணம் முடிக்க நினைப்பவர்களிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவர்களுக்கே என்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பேன்” என்றார்.
இனிப்பானதும்.. கசப்பானதும்..
Published on

வேதங்களைக் கற்றுக்கொடுத்து வந்த ஒரு குருவுக்கு, மிகவும் அழகான மகள் இருந்தாள். அவளை மணம் முடிக்க பலரும் போட்டி போட்டனர். ஆனால் அறிவில் சிறந்தவனுக்கே தன்னுடைய மகளைத் தருவது என்று குரு முடிவு செய்திருந்தார். தன் மகளிடமும் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். என்னுடைய மகளை மணம் முடிக்க நினைப்பவர்களிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவர்களுக்கே என்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பேன் என்றார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குருவின் வீட்டு முன்பாக கூடிவிட்டனர். அவர்களிடம் குருவானவர், இந்த உலகத்திலேயே இனிமையான ஒரு பொருளைக் கொண்டு வாருங்கள் என்றார்.

மறுநாள் அனைவருமே ஒவ்வொரு பொருளை கையோடு கொண்டு வந்திருந்தனர். ஒருவர் தேன் கொண்டு வந்திருந்தார். ஒருவர் இனிப்பு மிகுந்த கரும்பைக் கொண்டு வந்திருந்தார். இப்படி அவரவர் அறிவுத் திறனுக்கு எட்டியது போல் அவர்களின் இனிமையான பொருள் இருந்தது. அந்தக் கூட்டத்தில், குருவிடம் நீண்டநாளாக சீடனாக இருந்த ஒரு இளைஞனும் இருந்தான். அவனைப் பார்த்த குரு, நீயுமா..? என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன், குருவே உங்கள் மகள் மீது உள்ள ஈர்ப்பால் நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இதுநாள் வரை நீங்கள் எனக்கு குருவாக இருந்து, வைத்த அனைத்து போட்டியிலும் நான் பங்கேற்றிருக்கிறேன். அதே போன்ற ஒரு அறிவுப் போட்டியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் நான் வெற்றி பெற்றதாக நீங்கள் ஒப்புக்கொண்டாலே போதுமானது. உங்கள் மகளை எனக்கு மணம் முடித்துத் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறினான்.

தன் சீடனை நினைத்து பெருமைபட்டுக் கொண்ட குரு, அவன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று பார்த்தார். அவன் தான் வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியை குருவிடம் நீட்டினான். அதை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.

என்ன இது குரு அதிர்ந்து போய் கேட்டார்.

குருவே.. நீங்கள்தான் உலகிலேயே இனிமையான பொருளைக் கொண்டுவரச் சொன்னீர்கள். நாவை விட சிறந்த பொருள் ஏது? மனித நாக்கை கொண்டு வரமுடியாது என்பதால்தான். ஒரு குறியீட்டிற்காக கசாப்புக் கடையில் இருந்து ஆட்டின் நாக்கை வாங்கி வந்தேன். நாவில் இருந்து இனிமையான சொற்கள் பிறக்கின்றன. அது சோகத்தில் இருப்பவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. நோயாளியை குணப்படுத்துகிறது என்றான்.

அதைக் கேட்ட குரு முதல் கேள்விக்கான போட்டியில், அவனே வென்றதாக அறிவித்தார்

அடுத்த கேள்வியாக குரு சொன்னது, உலகத்திலேயே கசப்பான ஒரு பொருளைக் கொண்டு வாருங்கள்.

மறுநாளே.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு வந்தனர். சிலர் பாகற்காய், இன்னும் சிலர் எட்டிக்காய், இன்னும் சிலர் வேப்பங்காய் என்று தாங்கள் கொண்டு வந்ததை காட்டினர். குருவின் சீடன் மீண்டும் அதே ஆட்டின் நாக்கை கொண்டு வந்திருந்தான்

குரு கோபமாகிவிட்டார். என்ன விளையாடுகிறாயா? இனிப்பானது எது என்று கேட்டபோது கொண்டு வந்த அதே நாக்கை இப்போதும் நீட்டுகிறாயே என்றார்.

சீடன் நிதானமாக குருவே.. நாவை விட கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருப்பவனை துயரத்தில் தள்ளிவிடுகிறது. நட்பாக இருப்பவனை பகையாக மாற்றிவிடுகிறது. எனவே இதுதான் உலகிலேயே கசப்பான பொருள் எனறான்.

தன் சீடனின் அறிவைக் கண்டு மகிழ்ந்த குரு, அவனையே வெற்றியாளனாக அறிவித்து தன் மகளையும் மணம் முடித்து வைத்தார்.

ஆம்.. நம்முடைய நாவை விட சக்தி வாய்ந்த ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அது ஒரு சமயம் சொர்க்கத்தின் திறவுகோலாக இருக்கும். மற்றொரு சமயம் நரகத்தின் வாசல்படியாகவும் மாறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com