தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது

காசி விஸ்வநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள் மற்றும் மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது
Published on

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் புனரமைப்பு என அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக தொடங்கியது.

இன்று அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் யாக சாலை பூஜை தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.

சைவ சமய ஆதீனங்கள் கலந்துகொண்டு பூஜையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கேபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ராஜகோபுர திருப்பணிக் குழு தலைவர் பொறுப்பை 1984-ம் ஆண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏற்றார். அவரது தலைமையில் 25-11-1984 அன்று ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. 1990-ம் ஆண்டில் 180 அடி உயரத்தில் 9 நிலை அடுக்கு கொண்ட மிகப்பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதால் டாக்டர் பா.சிவந்தி அதித்தனாருக்கு இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பட்டம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com