பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்

'ஆரூரா, தியாகேசா' என பக்தி கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்
Published on

திருவாரூர்,

திருவாரூர் ஆழித்தேர் 

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை உடையது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின்போது ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

ஆழி என்றால் கடல். கடல் போன்ற பெரிய தேர் என்பதை குறிக்கவே ஆழித்தேர் என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் தேரழகு என்பது முதுமொழி. பங்குனி உத்திர திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.

பெரும்பாலான தேர்களில் விமானங்கள் ஆறு பட்டை, எண் பட்டை அல்லது வட்ட வடிவங்களில் இருக்கும். ஆனால் திருவாரூர் ஆழித்தேர் பீடம் முதல் விமானம் வரை பக்கத்திற்கு ஐந்து பட்டைகள் வீதம் 20 பட்டைகள் உள்ளன. இது தனிச்சிறப்பு வாய்ந்தது.

அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. விமானம் வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி உயரம் 48 அடி. விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறது ஆழித்தேர்.

திருச்சி பெல் நிறுவனம் ஆழித்தேருக்கு இரும்பு அச்சுகள், நான்கு இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் வசதி உள்ளிட்டவற்றை அமைத்து தந்துள்ளது. அலங்கரிக்கப்படாத ஆழத்தேரின் எடை 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணி ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கிறார்கள்.

இது தவிர தேரின் முன்புறம் கட்டப்படும் நான்கு குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள், தேரின் நான்கு புறங்களிலும் கட்டப்படும் அலங்கார தட்டிகள் ஆகியவற்றின் எடை 5 டன் ஆகும். எனவே அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 350 டன்னாகும்.

சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட நான்கு வடங்கள் தேரில் பொருத்தப்படுகிறது. தேரை தள்ளுவதற்கு பொக்லின் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு வீதியிலும் தேரை திருப்புவதற்கு இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது. நான்கு வீதிகளிலும் தேர் அசைந்தாடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.

ஆழித் தேரோட்டம் தொடங்கியது

மிக பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருந்து வலம் வருவார். பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் 'ஆரூரா, தியாகேசா' பக்தி கோஷம் முழங்க தேரை இழுத்து வருகின்றனர். அதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படும். முன்னதாக காலை 5.30 மணிக்கு விநயாகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

ஆழித்தேரோட்ட விழாவுக்காக  2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சப்தம் எழுப்பும் ஊதுகுழலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை மாற்றி அமைக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 150 போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க ஆண், பெண் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com