திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர பெருவிழா தொடங்கியது

இந்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக 27ஆம் தேதி திருக்கல்யாணம், 29ஆம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர பெருவிழா தொடங்கியது
Published on

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான இக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இது நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர பெருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு இந்திர பெருவிழா நேற்று முன்தினம் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. கொடியேற்றம் நேற்று இரவு 7:40 மணிக்கு மேல் 9:45 க்குள் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து இந்திரப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர் முருகர் சுவாமி அம்பாள் சண்டிகேசருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 25ஆம் தேதி அகோர மூர்த்தி பூஜையும், மாலை சகோபரம் எனப்படும் தெருவடைச்சான் வீதி உலாவும், 27 ஆம் தேதி திருக்கல்யாணம், 29ஆம் தேதி திருத்தேர், மார்ச் 3ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com