குடமுழுக்கு விழா: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

குடமுழுக்கு விழா: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது
Published on

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். புதன் பகவானை வழிபட்டால் கல்வி செல்வம், தொழில் மேன்மை, அரசியல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகம்.

மேலும் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலித்து வருகிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே ஸ்தலமாக இது விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, எம பயம் உள்ளிட்ட இடையூறுகள் நீங்குவதாக சுவேத புராணம் கூறுகிறது.

இவ்வளவு ஆன்மிக சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் குடமுழுக்கு வருகிற 7-ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை முழங்கிட ஹோமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய யாக குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பின்னர் சுவாமி, அம்பாள், அகோர மூர்த்தி, முருகன், நடராஜர், துர்க்கை மற்றும் காளி சன்னதிகளில் யாகசாலை தொடங்குவதற்கான அனுமதி பெறுகின்ற ஐதீக பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com