திருவிழா, விடுமுறை தினம்: முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்கள்

விழாவின் சிகர நிகழ்ச்சியான அசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது.
திருவிழா, விடுமுறை தினம்: முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்கள்
Published on

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்கி வருகிறது. சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் திருவிழாவை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் சுமார் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர்.

நாளை சூரசம்ஹாரம் என்பதால், அதனை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகங்களிலும், கடற்கரைகளிலும் தங்கியுள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலையாகவே காட்சியளிக்கிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com