திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பூர்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு

சக்கரத்தாழ்வாருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற்றது. முதல் நாள் பவித்ர பிரதிஷ்டையும், இரண்டாம் நாள் பவித்ர சமர்ப்பணமும் நடைபெற்றது. பவித்ரோற்சவத்தின் நிறைவு நாளான (3-வது நாள்) நேற்று மகா பூர்ணாஹுதி நடந்தது. அதன் ஒரு பகுதியாக கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சமய சடங்குகள் நடத்தப்பட்டன. மதியம் மகா பூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்பப்ரோக்ஷனம், நிவேதனம் ஆகியவை பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்டன.

தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கும், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கும் பல்வேறு சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

அதன்பிறகு சக்கரத்தாழ்வாரை ஒரு பல்லக்கில் வைத்து பத்ம சரோவரம் புஷ்கரணிக்கு மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு சென்றனா. அங்கு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புஷ்கரணியில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் மூன்று முறை மூழ்கி புனித நீராடினர்.

அதைத்தொடர்ந்து சந்திர கிரகணத்தால் மதியம் 2.15 மணிக்கு பத்மாவதி தாயார் கோவில் கதவுகள் மூடப்பட்டு, அதிகாலை மீண்டும் வழக்கம்போல் திறக்கப்பட்டன.

பவித்ரோற்சவ சிறப்பு நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், உதவி அதிகாரி தேவராஜுலு, அர்ச்சகர் பாபுசாமி, கண்காணிப்பாளர்கள் ரமேஷ், ஸ்ரீவாணி, கோவில் ஆய்வாளர்கள் சலபதி, சுபாஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com