அசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்... தத்ரூபமாக நிகழ்ந்த சூரசம்ஹாரம்

சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
Published on

திருச்செந்தூர்,

அசுரனான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த நாளே சஷ்டியாகும். இந்த நிகழ்வானது முருகன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வு சூரசம்ஹாரம். இந்நிகழ்வு திருத்தணி தலம் தவிர முருகன் எழுந்தருளி அருள்பாலிக்கும் மற்ற அனைத்து தலங்களிலும் வெகுவிமரிசையாகவும் பக்தி சிரத்தையுடனும் நடத்தப்படுகிறது. சூரனை வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டுவார்கள்.

இத்தனை சிறப்புமிக்க சூரசம்ஹார நிகழ்வு திருச்செந்தூரில் இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

அன்னையிடம் இருந்து பெற்ற சக்தி வேலுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூரனை வதம் செய்வதற்காக போர்க்கோலத்தில் புறப்பட்ட ஜெயந்திநாதர், மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'வெற்றி வேல், வீரவேல்' என முழக்கம் எழுப்பினர்.

சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். கடல் அலையென திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு மத்தியில் 'சூரசம்ஹாரம்' நடைபெற்றது. ஆணவத்தால் அடிபணிய மறுத்த சூரனை வதம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான். அவனை தனது வாகனமான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். மிகவும் தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட சூரசம்ஹாரத்தை கண்டுகளித்த பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர்.

தத்ரூபமாக நடந்த சம்ஹார நிகழ்வு

சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர். சஷ்டி விரதம் இருந்த பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருளினார்.

போர் தொடங்கியதும் முதலில் மாயையே உருவான யானை முகம் கொண்ட தாரகாசுரன், முருகப்பெருமானுடன் போருக்கு தயாரானான். அவனது சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வந்து முருகப்பெருமானுடன் போரிட தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. 

அப்போது முருகப்பெருமானின் சார்பாக அவரது வேல் கொண்டு தாரகாசுரனின் யானை தலை அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்க முகாசுரன் தலை பெருத்தப்பட்டு, அந்த சப்பரம் மீண்டும் முருகப்பெருமானை வலம் வந்து போருக்கு அழைப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டது. நேருக்கு நேர் போரிட்ட சிங்கமுகாசுரனும் முருகப்பெருமானின் வேல் கொண்டு வீழ்த்தப்பட்டான்.

அடுத்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முருகப்பெருமானை எதிர்கொண்டான். சூரனின் சப்பரம் முருகப்பெருமானை சுற்றி வந்து சவால் விடுவதுபோல் ஆடி அசைந்து வந்தது. அப்போது முருகப்பெருமானின் வேல் மூலம் சூரன் தலை வீழ்த்தப்பட்டது.

கடைசியாக மாமரமும் சேவலுமான உருமாறிவந்த சூருபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக ஆட்கொண்டார். இதை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில், சூரனின் சப்பரத்தில் வெட்டுண்ட தலைக்கு பதில் சேவல் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த சேவல், முருகப்பெருமானின் கொடியில் கட்டப்பட்டது. இத்துடன் சூரசம்ஹார நிகழ்வு நிறைவு பெற்றது.

சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டுகளித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com