சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட்- விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில் அழகிய வெண்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருக்குடை ஊர்வலம் சென்னையில் இன்று நடைபெற்றது. பூக்கடை சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விஷ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநில தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சிவசபா ஆசிரமம் நிர்வாகி அன்னை ஞானேஸ்வரி கிரி, திரைப்பட நடிகர் ரஞ்சித், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் வி.ஜெ.ஜெகதீசன், மாநில அமைப்பாளர் ஆத்தூர் வெ.பாலாஜி, அமைப்பு செயலாளர் எஸ்.வி.ராமன், திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல் எஸ்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்குடைகளையும், பெருமாள் திருப்பாதங்களையும் சுமந்தபடி புறப்பட்டனர். வழியெங்கும் திருக்குடைகளை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் 21 அழகிய திருக்குடைகள், பக்தர்களின் வரவேற்பு மற்றும் வழிபாடுகளுடன் மாலையில் கவுனி தாண்டியது. இந்த ஊர்வலம் 20-ம் தேதி திருப்பதி சென்றடைகிறது. 21-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவிலிலும், மாலை 4 மணி அளவில் திருப்பதி திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளிடமும் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும் என திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com