நாளை சனிப்பெயர்ச்சி.. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட செய்ய வேண்டியது என்ன?

ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான்.
நாளை சனிப்பெயர்ச்சி.. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட செய்ய வேண்டியது என்ன?
Published on

சனி பகவான் நாளை (29.3.2025) இரவு 9.44 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.

சனி பகவான் தனது 3-ம் பார்வையால் கால புருஷ 2-ம் இடமான ரிஷப ராசியையும், 7-ம் பார்வையால் கால புருஷ 6-ம் இடமான கன்னி ராசியையும், 10-ம் பார்வையால் கால புருஷ 9-ம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.

கிரகங்களில் சனி கிரக பெயர்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஒரு ராசியில் அதில் வருடம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளது.

தற்போது கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற என்ற எதிர்பார்ப்பும் அனைவருக்கும் இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அது அவரவர்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பொருத்தே அமையும். ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான்.

ஒருவர் எந்த மனத்தாங்கலும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும், கோச்சாரத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். அதேநேரத்தில் சதா சர்வ காலமும் நிலையான தொழில், உத்தியோகம், நிம்மதியான வாழ்க்கை இல்லாமல் சுய ஜாதகத்திலும் கோச்சாரத்திலும் சனி பகவானின் தாக்கம் உள்ளது என்று பொருள். எப்பொழுதுமே யாராக இருந்தாலும் எதாவது ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறுசிறு வேதனை அளிக்கக்கூடிய சம்பவங்கள் நடக்கும். அப்பொழுது ஆறுதலாக இருப்பது பரிகாரங்களே. ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்களை செய்வது வழக்கம்.

ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வில் சில எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் முறையான வழிபாடுகளை மேற்கொள்ளும்போது நல்ல பலன்கள் நடக்க துவங்கும் என்பது நம்பிக்கை. முதலில், அவரவர் குல தெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது கோவில்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வீட்டில் தினமும் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்கலாம். இவ்வாறு செய்வதன்மூலம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும். எதிர்வினைகளின் பாதிப்பு இருக்காது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது அந்த பட்சிகள், விலங்குகளின் கர்மாவையும் கலந்து உண்ண நேரிடும். தினமும் இயன்ற தான தர்மங்கள் செய்யலாம். குறிப்பாக பட்சிகளுக்கும், விலங்குகளுக்கும் உணவிடுவது, வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது அதிக நன்மையை ஏற்படுத்தும்.

வீட்டில் சமைக்கும்போது என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அந்த உணர்வானது சமைக்கும் உணவில் கலந்துவிடும். எனவே, சமைக்கும்போது அவரவர் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தபடி சமைத்தால், அன்றைய உணவானது இறை உணர்வுடன் கலந்த பிரசாதமாக மாறி வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.

இதுபோன்று எளிமையான பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாடுகளை செய்வதன்மூலம், இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அடுத்த இரண்டரை வருடத்திற்கு வீட்டில் அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com