யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதை முன்னிட்டு திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது.
யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. முதலில், நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் சாமியின் மூலவிரட்டை மறைத்திருந்த துணியை அர்ச்சகர்கள் அகற்றி, சாஸ்திர முறைப்படி சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினர். இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வெளியே தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.நாயுடு, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜே.ஷியாமளா ராவ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி விழாக்களை முன்னிட்டு அதற்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் வருகிற 30-ந்தேதி ஆஸ்தானம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர அனைத்துச் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com