வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு பல வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது.
வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வராபுரம் கிராமத்தில் உள்ள வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலையில் விக்னேஸ்வர பூஜை, புன்யாகாவாசனம், ரக்ஷாபந்தனம், வேதிகார்ச்சனை, திரவியாஹுதி, வஸ்த்ராஹுதி, பூர்ணாஹுதி மற்றும் தீபாதாரனையைத் தொடர்ந்து விசேஷ திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைக்குரிய மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், விசேஷ தீபாராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதன்பின்னர் காலை 8 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர், காலை 9 மணி அளவில் வடக்கு வாசல் செல்லியம்மன் விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர் என பல வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

கும்பாபிஷேக விழாவில் சுந்தரேஸ்வராபுரம் கிராம மக்கள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் என ஏராளமாளோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com