

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடைக்கானல் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 56 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய சிலைகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு பூஜை நடைபெற்று வந்தது. பூஜையின் நிறைவில் இன்று விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. நகரின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் அனைத்தும் கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலைகளின் ஊர்வலத்தினை காவடி விழா கமிட்டி தலைவர் ஜெயராமன் தொடங்கி வகித்தார். ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் எரிச்சாலை, நகராட்சி அலுவலகம், 7 ரோடு சந்திப்பு, அண்ணா சாலை ஆனந்தகிரி அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றை அடைந்ததும் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.