எம துவிதியை கொண்டாட்டம்.. யமுனையில் நீராடி சகோதரர்களை வாழ்த்திய பெண்கள்

சகோதர- சகோதரிகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பக்தியுடனும் பாரம்பரியத்துடனும் கொண்டாடுவதே எம துவிதியை.
Published on

தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கோவத்ஸ துவாதசி, தன திரயோதசி, எம தீபம், நரக சதுர்த்தசி, தீபாவளி, கேதார கௌரி விரதம், அமாவாசை, கோவர்த்தன பூஜை, யம துவிதியை என ஐந்து நாட்கள் பல்வேறு வகையில் கொண்டாடுகின்றனர். இதில் சகோதர- சகோதரிகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பக்தியுடனும் பாரம்பரியத்துடனும் கொண்டாடுவதே எம துவிதியை.

ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை திதியில் இந்த எம துவிதியை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் பெண்கள் தங்கள் சகோதரர்களை அழைத்து விருந்து அளித்து, புத்தாடைகள் கொடுத்து அவர்களுக்கு பொட்டு வைத்து ஆசி வழங்குகின்றனர். ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்கின்றனர். இது பாய் தூஜ் என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருநாள். இதற்கு புராண கதையும் உள்ளது.

எம தர்மன் ஒரு முறை ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை அன்று தன் சகோதரி யமுனையின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்றாள் யமுனை. இருவரும், ஒருவருக்கு ஒருவர் பரிசுகளையும் பலகாரங்களையும் கொடுத்து தங்கள் பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சகோதரியின் அன்பில் மகிழ்ந்த எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு அகால மரணம் கிடையாது என்று ஆசீர்வதித்து வரம் தந்தாராம்.

எனவே எம துவிதியைத் திருநாளில் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். நீர்நிலைகளில் புனித நீராடி சகோதரர்களின் நலனுக்காக பூஜை செய்கிறார்கள். குறிப்பாக யமுனை நதியில் நீராடுவது (யமுனா ஸ்நானம்) மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது அனைத்து பாவங்களையும் நீக்கி, நீண்ட, அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு எம தர்மனுக்கு பிடித்த பண்டிகையான எம துவிதியை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி யமுனையில் ஏராளமான பெண்கள் புனித நீராடி, அதன்பின்னர் தங்கள் சகோதரர்களுக்காக பூஜை செய்தனர். சகோதரர்களுக்கு நெற்றித் திலகமிட்டும், கையில் புனித கயிறு கட்டியும் வாழ்த்தினர். பின்னர் சகோதரர்களுக்கு பிடித்த இனிப்புகள் மற்றும் உணவுகளை அன்புடன் பரிமாறினர். பின்னர் அந்த சகோதரிகளுக்கு அவரவரின் சகோதரர்கள் பரிசுகளை வழங்கி ஆசி வழங்கினர்.

இதனால் யமுனை நதிக்கரையில் கூட்டம் அலைமோதியது. மதுராவில் உள்ள யமுனையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com