

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று பாடினார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அன்று. அது இன்றளவும் மாறவில்லை. தமிழரின் ஈகை குணமும், தேவைப்படுவோர்களுக்கு, ஓடோடிச்சென்று உதவும் பண்பும் தன்னிகரற்றது என்பது, உக்ரைன் நாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் இப்போது, இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல வசதியாக, தற்காலிகமாக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்றாலும், அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பது வருத்தத்துக்குரியது. கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி, இப்போது வரை, போர்.. இது போர்.. என்று சொல்லக்கூடிய அளவில், கடும் போர் உக்ரைனில் ரஷியாவால் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பெரும்பாடுபட்டார்கள். பதுங்கு குழிகளிலும், சுரங்க அறைகளிலும் சாப்பாடு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலசங்கர் என்பவர், அவர்களை தேடிச்சென்று உணவும், தண்ணீரையும் வழங்கிய கருணை செயல் மிகவும் போற்றுதலுக்குரியதாக இருந்தது. கடும் சண்டை நடந்த கார்கிவ் நகரில், கடந்த 10 ஆண்டுகளாக பாலசங்கர், ஒரு கிலோ பிரியாணி என்ற பெயரில், ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார். போர் அதிகமாக இருந்தபோது, உக்ரைன் நாட்டை சேர்ந்த அவர் மனைவி சோனியாவையும், 6 மாத குழந்தை மாறனையும், அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு, அவரும், அவரது சகோதரர்கள் அப்பு கிருஷ்ணன், சுஜித் குமார் ஆகியோரும், தங்கள் ஓட்டலில் பிரியாணியையும், பாஸ்தாவையும் சமைத்து, 1,500 இந்திய மாணவர்களை தேடிச்சென்று தினமும் வழங்கி வந்தனர்.
பாலசங்கர் உக்ரைனில் உள்ள தமிழ் சங்கத்தோடு இணைந்து, ஆதரவற்றோருக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார். முதல் நாளில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களில் தங்கியிருந்த மாணவர்களுக்கு உணவு கொடுத்தபோது, வாட்ஸ்-அப் குரூப்பில் தங்களின் செல்போன் எண்ணையும் இணைத்துக் கொண்டனர். உணவு வேண்டுபவர்கள் எல்லாம் தகவல் அனுப்பிய உடன், அவர்களும் தங்களது வாகனத்தில் உணவை ஏற்றிக்கொண்டு சென்று கொடுத்து வந்திருக்கிறார்கள்.
பல நேரங்களில் தங்களிடம் இருந்த உணவு தீர்ந்தபோது, ஆப்பிள், வாழைப்பழங்கள் போன்றவற்றை வாங்கி, தண்ணீர் பாட்டிலுடன் மாணவர்களுக்கு வினியோகித்திருக்கிறார்கள். உக்ரைன் எனது 2-வது வீடு. இந்த நாடு எனக்கு புதிய வாழ்க்கையை தந்தது. எனவே, இந்த நாடு கடும் இன்னலில் சிக்கித் தவிக்கும்போது, நான் மக்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று மிகமிக கருணை உள்ளத்தோடு பாலசங்கர் கூறினார். இவருடைய தயாள செயலைப் பார்த்து, பல நேரங்களில் உக்ரைன் போலீசாரும், ரஷிய ராணுவத்தினரும் அவருடைய வாகனத்தை தடுத்து நிறுத்திய நேரத்தில், அவர் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு பொருட்களை கொண்டு போகிறார் என்பதை அறிந்த உடன், மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். உதவிகளில் பெரிய உதவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதுதான். அந்த வகையில், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற தமிழ் கலாசாரத்தை, இந்தியாவுக்கு வெளியிலும் ஒரு தமிழர் நிரூபித்து இருக்கிறார். இதுபோல, இந்தியாவில் செயல்படும் பல தனியார் நிறுவனங்களும், உக்ரைனுக்கு அண்டை நாடுகளில் உள்ள தங்கள் கிளை ஊழியர்களை வைத்து, நாங்கள் மனிதநேயத்தில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், அந்த நாடுகளுக்கு வந்து இந்தியாவுக்கு திரும்பச் செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை அளித்திருப்பதும் பாராட்டுக்குரியது.