7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக சவுதி வெளியுறவுத்துறை மந்திரி ஈரான் பயணம்

சவுதி அரேபியா - ஈரான் இடையேயான தூதரக உறவு மீண்டும் தொடங்கியுள்ளது.
7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக சவுதி வெளியுறவுத்துறை மந்திரி ஈரான் பயணம்
Published on

தெஹ்ரான்,

வளைகுடா நாடுகளாக சவுதி அரேபியா - ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வந்தது. ஏமன் உள்நாட்டு போரில் அரசுப்படைகளுக்கு சவுதியும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இதன் காரணமாக சவுதி - ஈரான் இடையே மோதல் அதிகரித்தது. அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்போக்கு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது.

இதனிடையே, சவுதி அரேபியா - ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சிகள் மேற்கொண்டது. அந்த முயற்சியின் பயனாக கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி சவுதி - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க சம்மதம் தெரிவித்தன.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ள நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவுதி அரேபியா தூதரகம் திறக்கப்பட உள்ளது.

இந்த தூதரக திறப்பு விழாவில் பங்கேற்க சவுதி வெளியுறவுத்துறை மந்திரி பைசல் இன்று ஈரான் சென்றார். அவர் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது சவுதியில் திறக்கப்பட உள்ள ஈரான் தூதரக திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஈரான் அதிபருக்கு சவுதி வெளியுறவுத்துறை மந்திரி அழைப்பு விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com