மதுபான கொள்கை முறைகேடு குற்றவாளியிடம் ரூ.60 கோடி பெற்ற பா.ஜனதா - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு குற்றவாளியிடம் ரூ.60 கோடி பெற்ற பா.ஜனதா - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்பட கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ஆம் ஆத்மி கட்சி, இந்த வழக்கில் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறி வருகிறது.

அதேநேரம் இந்த வழக்கில் சிக்கிய தொழிலதிபர்களிடம் இருந்து பா.ஜனதா பணம் பெற்றிருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில் சரத் ரெட்டி என்பவரிடம் இருந்து ரூ.60 கோடி பெற்றிருப்பதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, நான் (சஞ்சய் சிங்) உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டோம்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருக்கும் சரத் ரெட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு ரூ.60 கோடி கொடுத்து இருக்கிறார்.

அதாவது சரத் ரெட்டி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரூ.5 கோடியை 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி கொடுத்து இருக்கிறார். 6 மாத சிறைவாசத்துக்குப்பின் 2023-ம் ஆண்டு மே 8-ந்தேதி அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

அடுத்த சில நாட்களில் அவர் ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு கொடுத்திருக்கிறார். முன்னதாக கைது நடவடிக்கைக்கு முன்னரும் ரூ.5 கோடி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக யார் மீதும் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மார்ச் 21-ந்தேதி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரங்கள் வெளியானபோது இந்த தகவல்கள் அம்பலமாகி இருந்தன" என்று சஞ்சய் சிங் கூறினார்.

ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com