இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
Published on

பெர்த்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 403 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 549 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 229 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய 2-வது பந்திலேயே மிட்செல் மார்ஷ் (181 ரன்) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதே போல் ஸ்டீவன் சுமித்தும் (239 ரன்) அவரது பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் (1 ரன்) ரன்-அவுட் ஆனார். இதன் பிறகு விக்கெட் கீப்பர் டிம் பெய்னும் (49 ரன்), கம்மின்சும் (41 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

உணவு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டோன்மான் (3 ரன்), அலஸ்டயர் குக் (14 ரன்) இருவரின் விக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் கபளகரம் செய்தார். பார்ம் இன்றி தவிக்கும் முன்னாள் கேப்டனான குக் கடந்த 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜோ ரூட்டும் (14 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஜேம்ஸ் வின்ஸ் தனது பங்குக்கு 55 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதற்கிடையே, மழையும் புகுந்து விளையாடியது. மழையால் இரண்டு முறை ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. 4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 38.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மலான் (28 ரன்), ஜானி பேர்ஸ்டோ (14 ரன்) களத்தில் உள்ளனர். மழையால் நேற்றைய நாளில் 25 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டது.

பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இங்கிலாந்து அணி மேற்கொண்டு 127 ரன்கள் எடுத்தாக வேண்டும். கைவசம் 6 விக்கெட்டுகளே உள்ளன. எனவே இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதே நேரத்தில், இன்றைய தினமும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com