ஆசிய கோப்பை: ஓமனுக்கு எதிராக யுஏஇ வெற்றி.. சூப்பர்4 சுற்றை உறுதி செய்த இந்திய அணி


ஆசிய கோப்பை: ஓமனுக்கு எதிராக யுஏஇ வெற்றி.. சூப்பர்4 சுற்றை உறுதி செய்த இந்திய அணி
x

image courtesy:ICC

நடப்பு ஆசிய கோப்பையில் முதல் அணியாக சூப்பர்4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும்.

இதில் அபுதாபியில் நேற்று மாலை நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அறிமுக அணியான ஓமனை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அலிஷான் ஷராபு (51 ரன், 38 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் முகமது வாசீம் (69 ரன், 54 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் அடித்தனர்.

பின்னர் ஆடிய ஓமன் 18.4 ஓவர்களில் 130 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், ஹைதர் அலி, முகமது ஜவாதுல்லா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

2-வது ஆட்டத்தில் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஓமனுக்கு 2-வது தோல்வியாகும். இதன் மூலம் ஏ பிரிவில் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பையில் முதல் அணியாக சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி பெற்று நல்ல ரன்ரேட்டை (+4.793) கொண்டுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் முதல் 2 இடங்களில் இருக்கும். இதன் காரணமாக இந்திய அணி சூப்பர்4 சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் முறையே 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கண்டுள்ளன. இந்த சூழலில் துபாயில் நாளை நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதில் வெற்றி காணும் அணி ‘ஏ’ பிரிவில் இருந்து 2-வது அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும். ஓமன் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

1 More update

Next Story