'நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது'- மனம் திறந்த யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
image courtesy; AFP 
image courtesy; AFP 
Published on

புது டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இந்தியா கண்டெடுத்த மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுகிறார்கள். அதில் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர்.

மறுபுறம் விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், பினிஷராகவும் செயல்பட்ட எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதை விட இந்த இருவரும் இந்தியா தடுமாறிய பல போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

இந்நிலையில் தாமும் தோனியும் எப்போதுமே நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை என்று மனம் திறக்கும் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடியதன் காரணமாகவே நண்பர்களாக இருந்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. மாறாக கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடியதால் மட்டுமே நண்பர்களாக இருந்தோம். தோனி மற்றும் என்னுடைய வாழ்க்கை ஸ்டைல் வித்தியாசமானது. அதனால் நாங்கள் எப்போதும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை. அதே சமயம் நாட்டுக்காக களத்தில் விளையாடும் போது நானும் தோனியும் 100 சதவீதம் எங்களுடைய பங்களிப்பை கொடுத்துள்ளோம்.

நானும் அவரும் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருந்த போது நிறைய விஷயங்கள் வித்தியாசமாக இருந்தன. அதாவது சில நேரங்களில் அவர் எடுக்கும் முடிவுகள் எனக்கு பிடிக்காது. நான் எடுக்கும் முடிவுகளை அவர் விரும்ப மாட்டார். இது ஒவ்வொரு அணியிலும் நடக்கும். ஆனால் என்னுடைய கடைசி காலத்தில் எனது கேரியர் பற்றிய தெளிவு இல்லாமல் தவித்தேன். அப்போது தோனியிடம் நான் அறிவுரை கேட்டேன். அவர் தான் தேர்வுக்குழுவினர் எனக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்பதை என்னிடம் நேரடியாக சொன்னார். அப்போது குறைந்தபட்சம் இவராவது என்னுடைய கேரியரை பற்றி வெளிப்படையாக சொன்னாரே என்று மகிழ்ச்சியடைந்தேன்' என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com