வயதை மறந்துவிடுங்கள்... கருண் நாயருக்கு பதிலாக அவரை பிளேயிங் லெவனில் சேருங்கள் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பெற்ற கருண் நாயருக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடியும்ள்ள கருண் நாயர் வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இளம் வீரரான சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிளேயிங் லெவனில் இடம்பெற வயதை விட திறமைதான் முக்கியம் என்று இந்திய முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். எனவே மூத்த வீரர் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சனை 4-வது போட்டிகான பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"கருண் நாயர் அற்புதமான 20 மற்றும் 30 ரன்களை குவித்து வருகிறார். அவர் (நாயர்) அழகான கவர் டிரைவ்கள் என அனைத்தையும் அடித்துள்ளார். ஆனால் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒருவரிடமிருந்து அழகான 30 ரன்கள் எதிர்பார்க்கப்படுவதில்லை. நீங்கள் அங்கே 100 ரன்களை எடுக்க வேண்டும். இங்கே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது
நாம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டும். சாய் சுதர்சனை நான் அதிகம் பார்த்ததில்லை. இப்போதைக்கு சிறந்த வீரரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். தற்சமயத்தில் நன்றாக இருக்கும் வீரர் யார் என்பதையும், உங்களுடைய நாட்டுக்காக அதிக செயல்பாடுகளை யார் கொடுப்பார் என்பதையும் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே வயதை மறந்து விடுங்கள், சுதர்சன் திறமையானவர் என்றால் விளையாட வைத்துப் போட்டியை வெல்லுங்கள்" என்று கூறினார்






