டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெற யாருக்கு அதிக வாய்ப்பு?- முழு விவரம்

குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Image Courtesy: ICC
Image Courtesy: ICC
Published on

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் 4 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அரையிறுதி போட்டிக்கு நியூசிலாந்து (குரூப் ஏ) மட்டுமே தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த குரூப்பில் தற்போது ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றை நிறைவு செய்துள்ளது. தற்போது அந்த அணி 2-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. குரூப் ஏ பிரிவில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளி கணக்கில் (7 புள்ளிகள்) ஆஸ்திரேலிய அணியுடன் சமநிலையில் இருக்கும். ஆனால் தற்போது இங்கிலாந்து அணியின் ரன் ரேட் +0.547 ஆக உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட் -0.173 ஆக உள்ளது.

இதனால் நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மாறாக இலங்கை வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறும். எதிர்பாராத விதமாக இலங்கை-இங்கிலாந்து ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெறும். இதனால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ஒருவேளை இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணியையும் பின்னுக்கு தள்ளி குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com