கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு : கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்- சோகத்தில் ரசிகர்கள்

தலைசிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய சைமண்ட்ஸ்-யின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.  இந்த தகவலை குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதி செய்துள்ளது.

கிரிக்கெட் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் -யின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் 133 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் எண்ணற்ற வெற்றிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.

இந்த நிலையில் இவரின் மறைவுக்கு தற்போது முன்னாள் வீரர்கள் உட்பட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சைமண்ட்ஸ் மறைவு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணமடைந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். களத்திலும் சரி வெளியிலும் சரி நாங்கள் சிறந்த உறவைப் பகிர்ந்து கொண்டோம்." என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஸ்மன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " காலை எழுந்தவுடன் சைமண்ட்ஸ் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் சோகமான செய்தி " என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இந்த செய்தி உண்மையானது என உணரமுடியவில்லை " என தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே மறைந்த அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் உலகம் மீள்வதற்கள் தற்போது சைமண்ட்ஸ்-யின் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com