"எனது சாதனையை முறியடிக்க யாராவது இருக்க வேண்டும்" - உம்ரான் மாலிக் குறித்து அக்தர் நெகிழ்ச்சி ..!!

161 கி.மீ. வேகத்தில் அக்தர் வீசிய பந்து தான் கிரிக்கெட் உலகின் வேகமாக வீசப்பட்ட பந்தாகும்.
Image Courtesy : AFP / IPL
Image Courtesy : AFP / IPL
Published on

மும்பை,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இவர் தனது அசுர வேகத்தால் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் .

இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து தான் இந்த ஐபிஎல்-லில் அதிவேகமாக வீசப்பட்ட பந்துகளில் முதல் இடத்தில் உள்ளது.

அது மட்டுமின்றி இவர் ஒவ்வொரு போட்டியில் பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசி வேகமான பந்து வீசியதற்கான விருதை ஒவ்வொரு போட்டியிலும் தட்டி செல்கிறார்.

இந்த நிலையில் தற்போது உம்ரான் மாலிக் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

உம்ரான் குறித்து அவர் கூறுகையில், " அவர் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் உலகின் வேகமான பந்தை நான் வீசியதன் 20 ஆம் ஆண்டு நினைவு கூறப்பட்டது. தற்போது வரை யாராலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை என ஒருவர் என்னை வாழ்த்தினார்.

ஆனால் எனது சாதனையை முறியடிக்க யாராவது இருக்க வேண்டும் என்றேன். உம்ரான் எனது சாதனையை முறியடித்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்தச் செயல்பாட்டில் அவர் காயமடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அவர் எந்த காயமும் இல்லாமல் நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் " என அக்தர் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 161 கிலோ.மீ வேகத்தில் அக்தர் வீசிய பந்து தான் தற்போது வரை கிரிக்கெட்-யில் வீசப்பட்ட வேகமான பந்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com