தோனியை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

தோனியை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தோனியை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி
Published on

திருவனந்தபுரம்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும், மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இரு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றிய போதும், இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி கடும் சவால் அளித்தது. இந்த தொடரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் ஆட்டம் மெச்சத்தகுந்த அளவில் இல்லை என்றும் கிரிக்கெட் விமர்சர்கள் விமர்சித்து இருந்தனர். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. விவிஎஸ் லட்சுமண், அகர்கர் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தோனியின் ஆட்டத்திறன் பற்றி கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி கூறுகையில்,

தோனியை மட்டும் அனைவரும் தனியாக குற்றம் சாட்டுகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக நான் 3 ஆட்டங்களில் சரியாக ஆடவில்லையென்றால் கூட யாரும் என்னை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் நான் இன்னும் 35 வயதைத் தாண்டவில்லை.

தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அனைத்து பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெறுகிறார். களத்தில் அணியின் வியூகத்துக்கு எப்படியெல்லாம் பங்காற்ற முடியுமோ அப்படியெல்லாம் பங்காற்றுகிறார். தனது ஆட்டத்தில் கடினமாக உழைக்கிறார். அணியில் அவரது பங்கு என்ன என்பது அவருக்குப் புரியும். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதை நிரூபிப்பது சாத்தியமில்லை.

இலங்கை சுற்றுப்பயணத்திலும், ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் நன்றாகத்தான் பேட்டிங் செய்தார். இந்தத் தொடரைப் பொறுத்தவரை அவருக்கு ஆடும் வாய்ப்பும் சரியாக அமையவில்லை. அவர் எந்த நிலையில் பேட்டிங் ஆட வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஹர்திக் பாண்டியாவும் அந்தப் போட்டியில் சரியாக ஆடவில்லை. ஏன் தோனி ஒருவரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? வசதியாக ஒருவரை மட்டும் தாக்குகிறீர்கள். இதில் நியாயமில்லை.

தோனி களமிறங்கும்போது தேவைப்படும் சராசரி, ஓவருக்கு 8.5 முதல் 9.5 ரன்கள் வரை இருக்கிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தது போல களத்தின் தன்மை இருக்காது. முதல் நிலையில் இறங்கி ஆடும் வீரர்களால் எளிதாக முதல் பந்திலிருந்தே அடித்து ஆட முடியும். ஆனால் பின்னால் ஆட வரும் வீரர்களுக்கு அப்படி இருக்காது. எல்லாவற்றையும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அணி வீரர்களும், நிர்வாகமும் ஒருவர் எந்த நிலையில் ஆடச் செல்கிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர். மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தோனி மிக புத்திசாலியானவர். அவரது ஆட்டம், உடல் தகுதி எந்த நிலையில் இருக்கிறது என்பது அவருக்கு புரியும். அவர் சார்பில் வேறு யாரும் முடிவெடுக்கக் கூடாது என நினைக்கிறேன்" என்று விராட் கோலி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com