ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 4 நகரங்களில் நடத்த ஆலோசனை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 4 நகரங்களில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 4 நகரங்களில் நடத்த ஆலோசனை
Published on

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வெற்றிகரமாக அரங்கேறியது.

இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடத்துவது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருக்கிறது. இருப்பினும் இதுவரை போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி இறுதி செய்யப்படவில்லை.

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வான்கடே, பிராபோர்ன், டி.ஒய். பட்டீல், ரிலையன்ஸ் ஆகிய 4 ஸ்டேடியங்கள் இருப்பதால் மும்பையில் கொரோனா உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து அனைத்து ஆட்டங்களையும் அங்குள்ள ஸ்டேடியங்களில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சிந்தித்தது. ஆனால் தற்போது மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மும்பையில் எல்லா ஆட்டங்களையும் நடத்த மேற்கொண்ட முயற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு சில நகரங்களில் போட்டியை நடத்தலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சீனியர் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது. விரைவில் சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். மராட்டிய மாநிலத்தில் தற்போது போல் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தால் மும்பையில் மட்டும் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்பது ரிஸ்க் ஆகி விடும்.

இதனால் இந்த போட்டியை 4-5 நகரங்களில் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனவே ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்கள் ஐ.பி.எல். போட்டியை நடத்த தயாராக இருக்க வேண்டும். ஆமதாபாத்தில் பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com