ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை பதம் பார்த்து கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.
ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 54-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மல்லுகட்டின. டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பவுண்டரியுடன் ஷிகர் தவான் ரன் கணக்கை தொடங்கினார். அவரது ஜோடியான விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் மட்டையை வேகமாக சுழட்டினார். இதனால் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி 60 ரன்கள் எடுத்தது.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் (8.4 ஓவர்) சேகரித்தனர். இந்த சீசனில் ஐதராபாத் ஜோடியின் சிறந்த தொடக்கம் இது தான். கோஸ்வாமி 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் இறங்கினார். இருவரும் அதிரடி காட்ட தவறவில்லை. சியர்லெஸ்சின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய வில்லியம்சன் (36 ரன், 17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) அதே ஓவரில் கேட்ச் ஆனார். இதற்கிடையே 45 ரன்களில் இருந்த போது எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய தவான் அரைசதத்தை எட்டினார். 15 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. அதனால் அந்த அணி 200 ரன்களை தாண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதிகட்டத்தில் கொல்கத்தா வீரர்கள் பந்து வீச்சில் பிரமிக்க வைத்து விட்டனர். ஷிகர் தவான் 50 ரன்களில் (39 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் வெகுவாக தடுமாறிப்போனார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் மட்டும் அந்த அணி ரன்-அவுட் உள்பட 4 விக்கெட்டுகளை தாரைவார்த்தது.

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 55 ரன்களும் (43 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராபின் உத்தப்பா 45 ரன்களும் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சுனில் நரின் 29 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் (நாட்-அவுட்) விளாசினர். 8-வது வெற்றியை சுவைத்த கொல்கத்தா அணி இதன் மூலம் 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்தது. ஐதராபாத் அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

ஒரு பிளே-ஆப் சுற்று இடத்திற்கு 3 அணிகள் போட்டி

இந்த ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் சுற்று இடத்திற்கு ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது இன்றைய கடைசி லீக் ஆட்டத்தின் முடிவில் தெரிய வரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com