

புதுடெல்லி,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர். ஒரு நாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை (6,190) கடந்த ஒரே வீராங்கனை என்ற பெருமைக்குரியவர்.
இவர் பேட்டிங்கில் 51.58 சராசரி வைத்து உள்ளார். 50க்கு மேல் பேட்டிங் சராசரி கொண்ட 5 பெண்களில் இவரும் ஒருவர். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டிகளில் அரை சதம் கடந்த முதல் வீராங்கனை.
2005 மற்றும் 2017 வருடங்களில் நடந்த ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்ற முதல் கேப்டன் ஆவார்.
அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இவர் கிரிக்கெட்டில் சிறப்புடன் செயல்பட்டதற்காக கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் 4வது உயரிய விருது என்ற பெருமை பெற்ற பத்ம ஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் தொழில் பற்றி சுயசரிதை எழுத ராஜ் முடிவு செய்துள்ளார். இது அடுத்த வருடம் வெளிவரும் என தெரிகின்றது.
இதுபற்றி கூறிய ராஜ், எனது கதையை பற்றி பகிர்ந்து கொள்வதில் உற்சாகமுடன் இருக்கிறேன். இந்த புத்தகம் வழியே அதனை மக்கள் விரும்பிடுவார்கள் என நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தினை வெளியிடும் உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம் என பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மிதாலி ராஜின் வாழ்க்கை திரைப்படம் ஆகவும் எடுக்கப்படுகிறது. இதற்கான உரிமையை வியாகம்18 மோசன் பிக்சர்ஸ் பெற்றுள்ளது.