இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு புதிய சலுகைகள்

நிர்வாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு புதிய சலுகைகள்
Published on

புதுடெல்லி,

பணம் கொழிக்கும் விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம் தனது வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி நிர்வாகிகளுக்கும் அள்ளித்தான் கொடுக்கிறது. நிர்வாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்க நேற்று முன்தினம் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த சலுகையால் கிடைக்கும் பலன்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நிர்வாக ரீதியாக செல்லும் வெளிநாட்டு பயணத்தின் போது விமானத்தில் முதல் வகுப்பில் பயணிக்கலாம். அத்துடன் அவர்களுக்கு தினசரி படியாக ரூ.82 ஆயிரம் வழங்கப்படும். முன்பு தினசரிபடியாக ரூ.61 ஆயிரம் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பயணம் மேற்கொள்ளும் போது, பிசினஸ் வகுப்பில் செல்ல முடியும். மேலும் அவர்களுக்கு தினசரி படியாக ரூ.40 ஆயிரம் அனுமதிக்கப்படும். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை போல் ஐ.பி.எல். சேர்மனுக்கும் இந்த சலுகைகள் உண்டு.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் 2 பிரதிநிதிகள் உள்பட கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி உறுப்பினர்கள் காலாண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது ரூ.40 ஆயிரமும், வெளிநாட்டு பயணத்தின் போது ரூ.41 ஆயிரமும் தினசரிபடியாக அளிக்கப்படும். இதே போல் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளூர் பயணத்தில் ரூ.30 ஆயிரமும், வெளிநாடு பயணத்தில் ரூ.32 ஆயிரமும் பெறுவார்கள்.

தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ.3 லட்சம் அளிக்கப்படும். இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.53 ஆயிரமும், உள்ளூர் பயணத்திற்கு ரூ.15 ஆயிரமும் பெறுவார்கள்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com