இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
Published on


* பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. குணதிலகா சதம் (133 ரன், 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார். அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக பக்தர் சமான் 76 ரன்களும், அபிட் அலி 74 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரையும் 2-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது.

* உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில், இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய இந்தியர் என்ற சிறப்புக்குரிய சென்னையைச் சேர்ந்த பிரக்யானந்தா முதல்முறையாக 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஆடுகிறார். அவர் முதல் சுற்றில் இத்தாலி வீரர் போட்டா மாசிமிலியானோவை 35-வது காய் நகர்த்தலில் வீழ்த்தி அசத்தினார்.

* இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் சூரத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது மற்றும் 4-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 2, 3-வது ஆட்டங்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடைசி 20 ஓவர் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த நிலையில் இரு ஆட்டங்கள் மழையால் ரத்தானதால் அதற்கு ஈடுகட்டும் வகையில் கூடுதலாக ஒரு ஆட்டம் நாளை இதே மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிரவோர் பெய்லிஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் விலகினார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை இங்கிலாந்து முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் முயற்சிப்பதாகவும், அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com