6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்க முடிவு

6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கராச்சி,

6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களில் மேலும் 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

கொரோனா பரவல் எதிரொலியாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப திட்டமிட்டனர். இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை உடனடியாக தள்ளிவைப்பதாக அறிவித்தது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் உரிமையாளர்களுடன் எஞ்சிய போட்டிகளை நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் நிறுத்தப்பட்ட இந்த போட்டியை ஜூன் மாதத்தில் மீண்டும் தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com